மயிலாடுதுறை மாவட்டத்தில் தர்மபுரத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதினத்தில் 27 மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரியார் சாமிகள் இருந்து வருகிறார். மேலும் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியில் சிகிச்சை மையம் அமைத்து கொடுத்தார். இந்நிலையில் குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த ஆண்டில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து விஜயதசமி தினத்தன்று இப் பள்ளியில் நடைபெற உள்ள மாணவர்களின் சேர்க்கைக்காக அருகிலுள்ள அகரஅன்னவாசல், அரும்பூர், விளநகர், மணக்கொடி, பால்பண்ணை மற்றும் மூங்கில் தோட்டம் ஆகிய ஆகிய கிராமங்களுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நேரில் சென்று நோட்டீஸ்களை வழங்கி பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றார்.
மேலும் தருமபுர ஆதீனத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்படும் நல திட்ட உதவிகள் மற்றும் தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றி ஒலிபெருக்கி மூலம் கூறி வருகிறார். அதன் பிறகு 1000 மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குவதற்கு வீடு வீடாக அழைப்பு விடுத்து வருவதைக் கண்ட கிராம மக்கள் தர்மபுரம் ஆதீனம் மடாதிபதி மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.