இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், சேவையை தொடங்க முடியாமல் போனது.
இதனையடுத்து 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட போது டிசிஎஸ் நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது. இதன் காரணமாக டிசிஎல் நிறுவனம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைந்து தற்போது 4 ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 2 நிறுவனங்களுக்கும் இடையே ரூபாய் 16 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 2 நிறுவனங்களும் விலை நிர்ணயம் மற்றும் சலுகைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.