தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசின் நலத்திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
அதன் பிறகு தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெரும் பணியாளர்கள், நடப்பு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த முழு நேர மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு சில்லறை செலவினத்தின் கீழ் ரூ. 1000 வழங்கப்படும். மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 500 பொங்கல் போனஸ் ஆக வழங்கப்படும். இதற்காக தமிழக அரசுக்கு 221 கோடியே 42 லட்ச ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.