நாடு முழுதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் 3ஆம் தேதி மக்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் வகையில் பெட்ரோல் மீதான கலால்வரியை ரூபாய் 5, டீசல் மீதான கலால்வரியை ரூபாய் 10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் இந்த வரி குறைப்பை நடைமுறைபடுத்திய பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையானது சற்று குறைந்தது.
இந்த சூழ்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் இதுஎதிரொலித்தது. அதன்படி 1 லிட்டர் பெட்ரோல் ரூபாய் 110 மற்றும் டீசல் ரூபாய் 100ஐ கடந்து விற்பனையானது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஆகவே எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து எஃகு மற்றும் இரும்புகளின் இறக்குமதி வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் இரும்பு பொருட்களின் விலை 10-15 சதவீதம் வரை குறையவுள்ளது. அதே சமயம் இரும்பு பொருட்களின் ஏற்றுமதிக்கு 50% வரியும், எஃகு பொருட்களுக்கு 15% வரியும் ஏற்றப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் டிஎம்டி கம்பிகள் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூபாய் 57,000 ஆக இருந்த ஒரு டன் டிஎம்டி கம்பிகள், தற்போது 52,000 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.