ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழில் ட்விட் செய்துள்ளார்.
12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஷர்த்துள் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளும், மிச்சேல் சான்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் தோனியும், அம்பத்தி ராயுடுவும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் அம்பத்தி ராயுடு 57 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கேப்டன் தோனி 58 (43) ரன்களும், ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட மிச்சேல் சான்ட்னர் சிக்ஸர் அடித்தார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிச்சேல் சான்ட்னர் 10* (3) ரன்களிலும், ஜடேஜா 9* (4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஹர்பஜன் சிங் சென்னை வந்ததிலிருந்தே தமிழ் ட்விட் செய்து அசத்தி வருகிறார். சென்னை அணி போட்டி முடிந்த பிறகு தமிழ் ட்விட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழில் ட்விட் செய்துள்ளார். அதில் “நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா இருக்கலாம்,ஆனா அங்கேயும் ஐபிஎல்ல எங்களோட #தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல, சி.எஸ்.கே தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்,நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.
நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம்,ஆனா அங்கேயும் @IPL ல எங்களோட #தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல,@ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல.களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்,நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் #RRvCSK
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 11, 2019