பிரிட்டன் இளவரசர் ஹரி கலப்பின பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டதால் எங்கள் மகன் ஆர்ச்சிக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று மேகன் மெர்க்கெல் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டி சிறிது நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில், ஹரியும் மெர்க்கலும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர். அதில் மெர்க்கல் கூறியதாவது , “நான் முதன் முதலில் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு பிறக்கும் குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் என்று அரச குடும்பத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார் .
ஆனால் அப்படி ஒரு கேள்வி எழுப்பிய அந்த நபர் யார் என்று என்னால் கூற முடியாது. ஒருவேளை நான் அந்த நபரின் பெயரை கூறி விட்டால் அவருக்கு பாதிப்பு நேரிடும்” என்று மெர்க்கல் கூறியுள்ளார் . மேலும் தங்கள் மகன் ஆர்ச்சிக்கு அரச குடும்பத்தில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது. அதோடு அரச குடும்ப வாரிசான எங்கள் மகனுக்கு பாதுகாப்பும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
அது எங்களுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது என்று ஹரி- மெர்க்கெல் தம்பதியினர் கூறியுள்ளனர் . அப்போது ஹரி, ” என் மகனின் நிறம் குறித்து அரச குடும்பத்தை சேர்ந்த அந்த நபர் கூறியபோது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் அரண்மனையில் இன ரீதியாக இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.