இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து “பிரபஞ்ச அழகி” என்ற பட்டத்தை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். இதனால் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு “பிரபஞ்ச அழகி” என்ற பட்டம் கிடைத்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள ஏலேட் என்ற நகரில் நடைபெற்ற 70-வது பிரபஞ்ச அழகி போட்டியில் உலக நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து ( வயது 21) தென்ஆப்பிரிக்கா மற்றும் பராகுவே அழகிகளை விழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.
இதையடுத்து முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவின் ஆண்ட்ரியா, இந்திய அழகியான ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு கிரீடத்தை அணிவித்துள்ளார். அதன் பிறகு மேடையில் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியுடன் பேசிய ஹர்னாஸ், இளம் பெண்களே நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தான் ஹீரோ, என்னை நான் நம்பியதால் தான் இந்த வெற்றி தனக்கு சாத்தியமானதாக இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அதேபோல் காலநிலை மாற்றம் குறித்து போட்டியின் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஹர்னாஸ் கவுர் சாந்து “மக்களின் பொறுப்பற்ற நடத்தை தான் இயற்கை பல பிரச்சனைகளை எதிர்கொள்ள காரணம்” என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பேசுவதை குறைத்து செயலில் முழு கவனத்தை செலுத்தினால் மட்டுமே வெற்றியை கைப்பற்ற முடியும் என்று ஹர்னாஸ் கவுர் சாந்து தெரிவித்துள்ளார்.