பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிபார்த்து தாக்குதலை நடத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக அந்நாட்டில் அதிகமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெற்கு பிராந்தியத்தை ஆக்கிரமித்திற்கும் இந்த பயங்கரவாதிகளின் நோக்கம் மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே. இதன் காரணமாக பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களில் ராணுவ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு மளிகைக் கடையின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களுக்கு இடையே இரு மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு பயங்கரவாதிகள் அதனை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடி குண்டுகள் வெடிக்க பட்ட நேரத்தில் அப்பகுதி முழுவதும் தீக்கிரையாகின. மேலும் அங்கு 5 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
அதன்பின் இந்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் அந்தப் பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் அங்கு உள்ள ஒரு தேவாலயம் முன்பு பெண் தற்கொலைப்படை சேர்ந்த ஒருவர் தன்னிடமுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் இந்த இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுமார் 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஜோலா நகரில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் இந்த பயங்கரவாத அட்டூழியங்களை செய்தது அபு சையாப் பயங்கரவாதிகளே என்று பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.