ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இதையடுத்து அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தந்த துறைகளை சேர்ந்தவர்கள் பொறுப்பேற்று வருகின்றனர். நேற்று முன்தினம் அமித்ஷா உள்துறை அமைச்சராகவும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஹர்ஷ்வர்தன் கோப்பில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார். அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இன்று உலக சைக்கிள் தினம் என்பதால் அவர் சைக்கிளில் வந்து பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.