Categories
தேசிய செய்திகள்

வணிகமயமாக்கலை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதா இஸ்ரோ?

அடுத்த 10 ஆண்டுகளில், 8600 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சந்தை விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இந்த வர்த்தக செயற்கைக்கோள்களுக்கான சந்தையில் களமிறங்கவுள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவியல், தொழிநுட்ப அரங்கைத் தாண்டி தற்போது வணிக அரங்கில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. உலக அளவில் பல பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சிகளில் வெற்றியடையப் போராடிவரும் நிலையில், இஸ்ரோ ஒருபுறம் வேகமாக இந்த முயற்சியில் வளர்ந்துவருகிறது.

தற்போது பிஎஸ்எல்வி தனது ஐம்பதாவது ஏவுகணையை விண்ணில் செலுத்தத் தயாராகவுள்ளது. ரிஸாட் – 2 பி.ஆர் 1 எனப்படும் உள்நாட்டு சோதனைக் கருவியுடன் சேர்த்து, மொத்தம் 9 சிறிய செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி 48 ஏவுகணையின் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. எஸ்எல்வி, ஏஎஸ்எல்வியைத் தொடர்ந்து பிஎஸ்எல்வியை விண்ணில் செலுத்துவதன் மூலம் இஸ்ரோ, வர்த்தக ரீதியாக புதிய உச்சத்தைத் தொடவுள்ளது.

சமீபத்தில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி 47 பல சிறப்புகளை பெற்றுள்ளது. அமெரிக்க சேட்டிலைட்டுளைக் காட்டிலும், பிஎஸ்எல்வி ஏவுகணையின் மூலம் செலுத்தப்பட்ட கார்டோஸாட் செயற்கைக்கோள் தெளிவான காட்சிகளைப் பகிரும். இதனுடன் சேர்த்து இஸ்ரோ மொத்தம் 300க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனைப் படைத்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 33க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரோவின் பயனாளிகளாக உள்ளன. மேலும் சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதிலும், இஸ்ரோ தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது. மேற்கூறப்பட்ட இந்த அனைத்து செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி ஏவுகணையின் மூலமே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

இஸ்ரோவின் சந்தைப்படுத்துதல் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தற்சமயம் வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை ஏவுவதில் கவனம் செலுத்திவருகிறது. சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சந்தை கடந்த பத்து ஆண்டுகளில் 12.6 பில்லியன் டாலரிலிருந்து 42.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இது மூன்று மடங்குகளாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், 8600 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சந்தை விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இந்த வர்த்தக செயற்கைக்கோள்களுக்கான சந்தையில் களமிறங்கவுள்ளன.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்கள் மனிதர்களை தாங்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் தயாராகிவரும் நிலையில், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் ’நியூ ஸ்பேஸ்’ இந்தியா லிமிடட் என்னும் நிறுவனம் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கான சந்தையை விரிவுப்படுத்துவதும், இஸ்ரோவின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியின் பலன்களை நாட்டின் தொழிற்துறையில் கொண்டுவருவதே இதன் முக்கிய நோக்கங்களாகும். இதன் ஒருபகுதியாக, லித்தியம் அயன் பேட்டரிக்கள் தனியார் நிறுவனங்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், பிஎஸ்எல்வியைவிட சற்று குறைவான செயல்திறனுடைய அளவில் சிறிய செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்துவருகிறது. 300 முதல் 500 கிலோ வரை எடை கொண்டவையாக இந்த செயற்கைக்கோள்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்வி எனப்படும் இந்த சிறிய அளவிலான செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் இஸ்ரோவின் செலவுகள் பெரும் அளவில் குறைந்து, எதிர்காலத்தில் எளிமையான முறையில் செயற்கைக்கோள்களை ஏவ உந்துதலாக மாறக்கூடும்.

எஸ்எஸ்எல்வி உருவாக்கம் மற்றும் செயல்படுத்துவதற்கான கால அளவு, விலை போன்றவை பிஎஸ்எல்வியுடன் ஒப்பிடும்போது நான்கு மடங்குக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 30 கோடி ரூபாய் மதிப்புடைய பிஎஸ்எல்வி சோதனை ஓட்டத்திற்கு 600 ஊழியர்கள் தேவைப்படும் நேரத்தில், 10 பேர் கொண்ட குழு, எஸ்எஸ்எல்வி சோதனை ஓட்டத்திற்குப் போதுமானது. அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டிற்கு 60 செயற்கைக்கோள்கள் வரை விண்ணில் செலுத்தப்படும் என ஆன்டிரிக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. வணிக செயற்கைக்கோள்கள் இவ்வாறு ஏவப்படுவதால், உலக சந்தையில் இந்தியாவின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ள அதே வேளையில், உலக நாடுகளின் மத்தியில் நாட்டின் மதிப்பும் உயரும்.

பொதுவாக, தகவல் தொடர்பு மற்றும் ஆற்றலில் சிறந்து விளங்கும் நாடுகளை எந்த உலக நாடுகளும் விரோதப்போக்குடன் அணுகுவதில்லை. இந்தியாவின் அண்டை நாடுகள் சிறு செயற்கைக்கோள்களை ஏவத் தயாராகவுள்ள நிலையில், இஸ்ரோவின் இந்த புது முயற்சியால் அண்டை நாடுகளின் மத்தியில் நாட்டின் மதிப்பு உயரும். சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் மேம்படுத்தப்பட்ட தகவல்தொடர்பு வசதிகளுக்காக இந்தியா ஜிசாட் சேவைகளை வழங்கியிருந்ததுடன் சிறப்பு சேவைகளையும் வழங்கியுள்ளன.

பல நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் செயற்கைக்கோள்கள் ஏவுவதற்கான சந்தையில் சமீபத்தில் நுழைந்துள்ளன. ஒரு செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான நடப்பு செலவுத் தொகை 14.25 லட்சம் ரூபாயாகும். இந்த சேவையை இன்னும் குறைந்த விலையில் வழங்க முன்வந்தால் சந்தை மேலும் விரிவுபடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ’ராக்கெட் லேப்’ எனும் நிறுவனம் உலகின் மிகச் சிறிய ஏவுகணை எனக் கருதப்படும் எலெக்ட்ரான் எனும் ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, நியூசிலாந்திலுள்ள அந்நிறுவனத்தின் ஏவுதளத்திலிருந்து 6 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. சுமார் 150 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் செலுத்த 60 மில்லியன் டாலர் வரை செலவாகும்.

மற்றொருபுறம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மறுசுழற்சி முறையில் உபயோகிக்கும் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில், சோதனைக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுபோன்ற சோதனை முயற்சியை இந்தியா 2016ஆம் ஆண்டே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லிங்க் ஸ்பேஸ் என்னும் நிறுவனமும், RLV T5 என்ற ஏவுகணையை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. மேலும் சீனாவின் மற்றொரு நிறுவனமான ஐ ஸ்பேஸ், 2021ஆம் ஆண்டு மறு சுழற்சி முயற்சியில் இறங்கவுள்ளது. இந்த முயற்சி வெற்றியடையும்பட்சத்தில், செலவை 70 விழுக்காடுவரை குறைக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரோ மேம்படுத்தினால், நமக்கு தோல்வியே இல்லை. உலக அரங்கில் ‘விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவுக்கு இறங்கு முகமே கிடையாது’ என்னும் நிலையை இந்தியா வெகு விரைவில் அடையும் என நம்புவோம்!

Categories

Tech |