ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு விதமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
தற்போது வரை உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என்று மொத்தமாக சுமார் 200 நபர்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, இரவு சமயத்தில் அவர்களுக்கு கீச்சிடும் சத்தம் கேட்கிறதாம்.
அதன்பின்பு, தலை சுற்றுவது மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது என்றும் கூறுகிறார்கள். கடந்த 2016-ம் வருடத்தில் கியூபாவின் தலைநகரான, ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தான் முதன்முதலில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இதனை ஹவானா அறிகுறி என்று கூறுகிறார்கள். ரஷ்யா போன்ற பல நாடுகள், இதன் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோவேவ் அல்லது சோனிக் அலைகள் பரப்பப்படுவதால், இந்த பிரச்சனை உண்டாகிறது என்றும் வேண்டுமென்றே அல்லது ஒரு இயந்திரத்தின் பழுது காரணமாக இப்பிரச்சனை உண்டாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எனினும், குறிப்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் எதற்காக இப்பிரச்சனை தோன்றுகிறது? என்பதற்கு பதில் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் நேற்று கூறியுள்ளார்கள்.