முன்விரோதம் காரணமாக வாலிபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் பெரிய குப்பம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் வேப்பிலை அள்ளி கிராமத்தில் லாரி டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ராமசாமிக்கும் ரமேஷுக்கும் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து ராமசாமி வேப்பிலை அள்ளி பகுதியில் தனது உறவினர் இறந்ததால் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ரமேஷ் முன் விரோதத்தை மனத்தில் வைத்து கொண்டு ராமசாமியை அருகிலிருந்த உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து கீழே தள்ளிவிட்டார். அதன் பிறகு அங்கு கிடந்த கல்லை எடுத்து ராமசாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமியை கொலை செய்த ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.