இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளரான அனில் கும்ப்ளே நேற்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டியது கங்குலி என்றால், அதே ஆஸ்திரேலியாவை இந்தியாவை பார்த்து பயப்பட வைத்தவர், அனில் கும்ப்ளே. சாந்தமாக இருந்த அவரும் அந்தத் தொடரின் போது ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்றார்.அனில் கும்ப்ளே என்ற பெயரை 90ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தாடை உடைந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 14 ஓவர்களை வீசியது, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது போன்ற ஏரளமான மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுக்கு தந்தவர் அனில் கும்ப்ளே.
காயத்தையும் பொருட்படுத்தாமல் பவுலிங் செய்து மிரட்டிய கும்ப்ளே :
கிரிக்கெட்டை பொறுத்தவரையில், இந்திய அணி சிறந்த பேட்ஸ்மேன்களையும் சுழற்பந்து வீச்சாளர்களையும் தயார் செய்யும் என்பதை அனில் கும்ப்ளே மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். 1960,70களில் இந்திய அணியின் தலைசிறந்த ஸ்பின்னர்களாக வலம் வந்தவர்கள் பி.எஸ். சந்திரசேகர், எஸ். வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி.
இவர்களுக்கு அடுத்தப்படியாக இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளராக எண்ட்ரி தந்து, தற்போது பலருக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பவர் அனில் கும்ப்ளே. 1980களில் இருளில் இருந்த பாகிஸ்தான் அணியின் ஸ்பின் பவுலிங், மாயாஜாலக்கார லெக் ஸ்பின்னர் அப்துல் காதிரின் வருகைக்குப் பிறகு புத்துயிர் பெற்றது. அதன்பிறகு 1990, 2000ஆம் ஆண்டுகளில் அந்த லெக் ஸ்பின்னை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளேதான்.
லெக் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே, ஷேன் வார்னேவிடமிருந்து சற்று மாறப்பட்டவர். ஷேன் வார்னே பந்துகளை அதிகம் ஸ்பின் செய்தும், வெரைட்டியான பந்துகளை வீசியும் பேட்ஸ்மேன்களை விக்கெட்டு எடுப்பார். ஆனால், அனில் கும்ப்ளே பந்தை அதிகம் ஸ்பின் செய்யாமல் விக்கெட் டூ விக்கெட் லைன் லெங்கதில் வீசியே பேட்ஸ்மேன்களை அவுட் செய்வார்.
இவரது காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்த ஸ்பின் ட்ரியோ (Spin Trio), முரளிதரண், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளேதான். இவர்கள் மூவரும் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களாக அவர்களது காலகட்டத்திலே மாறினர். அனில் கும்ப்ளேவின் சுழற்பந்துவீச்சை கொண்டாடிய அளவிற்கு அவரது கேப்டன்ஷிப் கொண்டாடப்படவில்லை.
அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் பயணித்து 2007-08இல் ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடியது. பல்வேறு சர்ச்சைகள் அடங்கிய இந்தத் தொடரில் அனில் கும்ப்ளேவின் கேப்டன்ஷிப்பை பார்த்து அனைவரும் மிரண்டனர்.
மெல்போர்ன், சிட்னியில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது. குறிப்பாக, சிட்னியில் நடைபெற்ற போட்டியில் நடுவர்களான மார்க் பென்சன், ஸ்டீவ் பக்னர் ஆகியோரின் தவறான தீர்ப்புகளினால்தான் இந்திய அணி தோல்வி அடைந்தது.
அவுட்டான ஆண்ட்ரூவ் சைமண்ட்ஸுக்கு இவர்கள் மூன்று முறை நாட் அவுட் தந்தனர். மறுமுனையில், அவுட்டாகாத டிராவிட், கங்குலிக்கு இவர்கள் அவுட் தந்தனர். அதேசமயம், அந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸை பார்த்து குரங்கு எனக் கூறியதாக, ஆஸ்திரேலிய அணி இந்த விவகாரத்தை மிகப் பெரிய சர்ச்சையாக்கியது.
நடுவர்களின் தவறை மறைக்கவே ஆஸ்திரேலிய அணி இதுபோன்று நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்தப் போட்டி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த அனில் கும்ப்ளே, “தான் இந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி இந்தியாவிற்கு செல்வதாக” கோவத்துடன் தெரிவித்தார். ஹர்பஜன் அப்படி பேசினார் என எந்த ஒரு சாட்சியும் நிரூபிக்கபடாத போது ஐசிசி அவருக்கு மூன்று போட்டிகள் விளையாட தடைவித்தது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியான பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 16 வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலிய 17ஆவது வெற்றியை ருசிக்க தயாராக இருந்தது.ஆனால், சாந்தமாக இருந்த அனில் கும்ப்ளேவை ஆஸ்திரேலிய அணி ஆக்ரோஷமடையச் செய்தனர். அவர் தனது கேப்டன்ஷிப்பில் எடுத்த ஆக்ரோஷத்தின் பலனாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை அந்தப் போட்டி முழுவதும் ஆதிக்கம் செய்து பயமுறுத்தியது.
இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், லக்ஷமன், ஆர்.பி சிங், டிராவிட், சச்சின் என அனைவரும் தந்த பங்களிப்பினால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதுவரை கொடிகட்டி பறந்த ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனில் கும்ப்ளே. போங்கு ஆட்டம் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு அவர் நல்ல பாடத்தை கற்பித்தார்.
இதையடுத்து, அடிலெயிட் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி வெற்றிபெற்று இந்தத் தொடரை சமன் செய்யக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரேலிய அணி டிஃபெண்ட் செய்து விளையாடி டிரா செய்தது. இந்திய அணியின் ஆட்டத்திறனைப் பார்த்து, பயந்துவிட்டதால் ஆஸ்திரேலிய அணி நான்காவது போட்டியில் டிஃபெண்டிங் ஆட்டத்தை விளையாடியது என சேவாக் தெரிவித்திருந்தார்.
அவரது கேப்டன்ஷிப் குறுகிய காலமாக இருந்தாலும், கொடிகட்டி பறந்த ஆஸ்திரேலியாவையே அவர்களது சொந்த மண்ணில் இந்திய அணியை பார்த்து அஞ்சி நடுங்க வைத்தார் அனில் கும்ப்ளே.ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டியது கங்குலி என்றால், அதே ஆஸ்திரேலியாவை இந்தியாவை பார்த்து பயப்பட வைத்தவர் அனில் கும்ப்ளே.
1999இல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், 2008இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்துக்குப் பிறகு டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி, ஃபோட்டோகிராஃபியில் மகிழ்ச்சி காணும் ஜம்போ அனில் கும்ப்ளேவிற்கு நேற்று பிறந்தநாள் .
Happy Birthday to the Jumbo of Indian Cricket @anilkumble1074.
✅6️⃣1️⃣9️⃣ Test wickets 👏
✅3️⃣3️⃣7️⃣ ODI wickets 👏
✅Only Second Bowler to take 10 wickets in a Test innings – 10 for 74 against Pakistan at Delhi, 1999
✅Wisden Cricketer of the Year 1996#HBDAnilKumble #HBDJumbo pic.twitter.com/Aal22PFNrm— Directorate of Sports MP (@dsywmpofficial) October 17, 2019