Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்., 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்தார். பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். 1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவுசெய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது.

இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில், அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்ய பத்திரப்பதிவு வருவாய் மிக அவசியம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |