Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 குஜிலியம்பாறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், சிவகங்கை மாவட்டம் அல்லூரில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து சேகர் என்பவர் போட்டியிட்டார். ஒன்பதாவது சுற்று முடிவில் 300 ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அலுவலர்கள் வாய்மொழியாக அறிவித்து சான்றிதழ் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் இரண்டு மணி நேரமாக வெற்றி பெற்ற சான்றிதழ் தராமல் அலைக்கழித்த நிலையில் நான் அது குறித்து கேட்டபோது சேகர் வெற்றி பெற்றிருப்பதாகவும் 28 வாக்குகள் வித்தியாசத்தில் சேகர் வெற்றி பெற்றதாக சான்றிதழை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

எனது ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. ஆகையால் சேகரின் வெற்றியை ஏற்றுக் கொள்ள இயலாது. ஆகவே, குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் பனங்காடியைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் அல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில், மொத்தம் 250 வாக்குகள் பதிவாகின. ஆனால் வாக்குகளை எண்ணும் போது 241 வாக்குச்சீட்டுகள் மட்டுமே இருந்தன.

எண்ணிக்கையின் முடிவில் நான் 115 வாக்குகளைப் பெற்றதாகவும், என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் 121 வாக்குகள் பெற்றதாகவும் 5 வாக்குகள் செல்லாது என்றும் கூறினர்.

ஆறு வாக்குகள் வித்தியாசத்திலேயே என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் காணாமல் போன ஒன்பது வாக்குச்சீட்டுகளை கண்டுபிடித்து கணக்கிட்டால் நான் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே காணாமல் போன ஒன்பது வாக்குச்சீட்டுகளையும் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் வெற்றியை அறிவிக்கவும். இல்லைஎனில் அல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு ஒன்றுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன், துரைசுவாமி அமர்வு இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories

Tech |