ஹெச்.சி.எல் நிறுவனமானது சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளதால் அதனைக் கொண்டாடும் வகையில் தங்களது ஊழியர்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டி இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஹெச்.சி.எல் நிறுவனம் எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஹெச்.சி.எல் நிறுவனம் கூறும்போது கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஊழியரும் ஆர்வமுடனும் மிகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியதால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது.
இதனால் எங்களின் ஊழியர்கள் தான் எங்களின் மிகப்பெரிய சொத்து என்று கூறியுள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஹெச்.சி.எல் நிறுவனமானது சுமார் 1.59 லட்சம் ஊழியர்களுக்கு ரூபாய் 700 கோடி மதிப்பில் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த ஸ்பெஷல் போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.