அமெரிக்காவில் கொள்ளை கும்பலில் ஒருவன் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக். இவரது இயற்பெயர் பஷர் பராகா ஜாக்சன். 20 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொள்ளை கும்பல் ஓன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்மோக் கொள்ளை கும்பலை விரட்டியடிப்பதற்கு அவர்களுடன் சண்டையிட்டு போராடினார்.
அப்போது திடீரென கொள்ளை கும்பலில் ஒருவன் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டான். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து கொள்ளை கும்பல் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனிடையே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் பதறிப்போன அக்கம்பக்கத்தினர் ஏதோ விபரீதம் நடந்துள்ளதாக உணர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் போலீசார் விரைந்து அவரது வீட்டிற்கு வந்ததுள்ளனர். அப்போது அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த ஸ்மோக்கை அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஸ்மோக் பரிதாபமாக இறந்து போனார். பாப் ஸ்மோக்கின் மறைவை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் சமூக வளைத்தளங்கள் வாயிலாக அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.