தலைநகர் டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அம்மாநில முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாகப் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16-ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியேற்பு விழாவிற்கு எந்த மாநில முதலமைச்சர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் அதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடியை தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்துமுடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் 8 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றன. இந்த வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலுக்கான வெற்றி எனவும் புதுவித அரசியலின் தொடக்கம் இது எனவும் கெஜ்ரிவால் பெருமித்துடன் தெரிவித்தார்.