ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மோடி அரசு மிகவும் வலிமையானது எனவும் அவர்களுடைய கண்களை கூட யாரும் நேரடியாக பார்க்க முடியாது எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் எல்லையில் சர்ச்சைகளும் மோதலும் நீடிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டு அதிபரை பிரதமர் மோடி பலமுறை சந்தித்து பேசி அவருடன் ஊஞ்சல் ஆடி இருக்கிறார்.
இதெல்லாம் நடந்த பிறகும் கூட இன்னும் சீன எல்லையில் மோதல் நீடிக்கிறது. சீன எல்லையில் நடக்கும் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் நோட்டீஸ் கொடுத்தும் இதுவரை அவர்கள் எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. எல்லையில் நடைபெறும் மோதலில் சீனாவை எதிர்க்க முடியாமல் தான் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்தாமல் இருக்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் எங்களை தேச விரோதிகள் என்று கூறிவிட்டு அவர்கள் மட்டும் தேசப்பற்று உள்ளவர்கள் போன்று காட்டிக் கொள்கிறார்கள். வெளிய அவர்கள் சிங்கம் போல பேசுவார்கள்.
ஆனால் உள்ளுக்குள் அவர்களுடைய செயல்பாடுகளை பார்த்தால் எலியை போன்று தான் இருக்கும். ஆனால் இந்த நாட்டிற்காக உங்களுடைய நாயாவாது உயிர் தியாகம் செய்து இருக்கிறதா? ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி கிடையாது. இந்த நாட்டிற்காக காங்கிரஸ் கட்சியின் ஏராளமான தலைவர்கள் உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள். ராஜ்நாத் சிங் சீன விவகாரம் குறித்து ஒரு பக்க அறிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் எல்லையில் என்ன நடக்கிறது அரசு என்ன செய்கிறது நம்முடைய வீரர்களின் நிலை என்ன என்பது குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறோம். ஆனால் இந்த விவாதத்தை நடத்தாமல் ஒளிந்து ஓடுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.