தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தின் தலைமையகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதன் தலைமை அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இந்த தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக டேன்டீ தலைமை அலுவலகம் மூடப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.