தமிழகத்தில் கொரோனா பாதித்த 2,134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவல் குறைந்தபாடில்லை. குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளன. நாடு முழுவதும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதித்த 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருப்பது மக்களுக்கு ஒரு நிம்மதியை ஏற்படுத்துகிறது. அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் மகராஷ்டிரா 4,786, குஜராத் 2780, டெல்லி2,512, ராஜஸ்தான் 2,378, தமிழ்நாடு 2,051 என்ற அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
இந்த நிலையில் தான் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டது. இதில், இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. 6520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல இன்று ஒரே நாளில் 83 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,134ஆக உயர்ந்துள்ளது.