ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். காக்கினாடா மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருக்கு கை குலுக்கி மருத்துவர்கள் வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. சுமார் 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தமாக நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக COVID-19 க்கான மாநில நோடல் அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.