தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இதில் 190 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றார்.
மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட, தானாக முன்வந்து விவரங்கள் அளித்த, 1,103 பேரில் 658 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77,300 பேர் வீட்டுக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.