பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்
உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் பொல்சனரோ நடந்துகொள்கிறார்.
கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்தே தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிமைப்படுத்துவதால் வைரஸை கட்டுப்படுத்த முடியாது பொருளாதாரம் மட்டுமே இதன் காரணமாக வீழ்ச்சியடையும் என கூறி வருகிறார். இந்நிலையில் பிரேசிலில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸால் தாக்கப்பட்ட இரண்டாயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். ஆனாலும் இதுவரை அதிபர் பொல்சனரோ ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தவில்லை.
இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி லுயிஸ் ஹென்ரிக் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொரோனா விவகாரத்தில் அதிபர் பொல்சனரோவின் செயலை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சுகாதாரத்துறை மந்திரி ஹென்ரிக் அதிபர் பொல்சனரோவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.