தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக இருந்தது.
இந்த நிலையில் தற்போது தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மேலும் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியான 5 பேர் மூலமாக 72 பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியான 77 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் இருந்தவர்கள் என்றார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ல் இருந்து 911 ஆக அதிகரித்துள்ளது.