தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1,075 அதிகரித்துள்ளது. இதில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.