45 நிமிடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டு பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனைக்கு சுஜாதா என்ற பெண் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவரது இதயத்தில் மிகப் பெரிய பிரச்சினை இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்த பிறகு இதய தானம் பெற பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயத்தை கொடுப்பதற்கு அவரது குடும்பத்தினர் முன் வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மதுரையில் உள்ள இதயமானது 45 நிமிடத்தில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் பின்னர் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள் போன்ற குழுவினர் அந்த பெண்ணுக்கு மாற்று இதயத்தை வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் கூறும்போது, தனக்கு இதயத்தை தானம் அளித்து மறுவாழ்வு கொடுத்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தன் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.