தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளன.
தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில்,
சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் பதிவாகி இருந்தன. இதில் சீழ்க்கை சிறகி என்ற வாத்தினம் இந்த வருடத்தில் புதிய வரவாக பதிவாகியுள்ளது. இது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகிலும் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகிலும் அதிகமாக வசித்து வருகிறது. இந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டவர்கள் இது குறித்து தெரிவித்த போது,
பெரும்பாலான நீர்நிலைகளில் ஆராய்ச்சி மேற்கொண்ட போது அங்கே குப்பை குளமாக காட்சி அளிக்கப்பட்டது. குளங்கள் தூர்வாரப்பட்ட நிலையில் கிராம மக்கள் அதனை சரியாக பராமரிக்காமல் விட்டதன் விளைவாக ஆங்காங்கே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளும், குப்பைகளும் கிடந்தன. இவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் சரியாக கண்காணித்து சரி செய்தால் மேலும் பறவைகளின் எண்ணிக்கை கூடும் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.