கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்த நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் குடியிருப்புகள் நீரில் மூழ்கியது.
இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சில பகுதிகளில் பள்ளிகளுக்குஇன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு. மைசூரு, ஹாசன், மாண்டியா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கனமழை மற்றும் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் முதல்நிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.