அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. தற்போது இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பெரிய கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் வழியில் பலத்த காற்று வீசியதல் சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசமரம் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற தாசில்தார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆட்களை வைத்து எந்திரம் மூலம் சாய்ந்து கிடந்த மரத்தை அகற்றி உள்ளனர். அதன் பின்னரே அங்கு போக்குவரத்து சீராக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வி.கைகாட்டி, தா.பழூர் மற்றும் பல பகுதிகளிலும் இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.