10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களின் அனேக இடங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழையும் , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் , சிவகங்கை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , வேலூர் , தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 சென்டி மீட்டர் மழையும் , தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் , மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் சுழல் காற்று வீசுவதால் மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.