வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை, திண்டுக்கல், திருச்சி, வேலூர், கரூர், சேலம் மற்றும் தர்மபுரி என 7 மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.
எனவே, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியாசாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகியவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறாவளி கற்று வீசும் என்பதால் அப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.