தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி , நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 சென்டி மீட்டர் மழையும் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை எந்த அபாயமும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.