தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. நாளை கேரளா, கர்நாடக கடற்கரை பகுதிகளுக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.