சென்னையில் தீபாவளியையொட்டி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு வடமேற்கு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலும்,
திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.