மலேசியாவில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு 14 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தற்போது பருவநிலை மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் போகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில், காலங்கள் தவறி, வழக்கத்திற்கு மாறாக, பலத்த மழை கொட்டி தீர்த்துவருகிறது.
இதனால், வெள்ளப்பெருக்கு உருவாகி உயிர் பலிகள் ஏற்படுகிறது. அந்த வகையில், மலேசியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மழை கொட்டி தீர்த்து, நாடே வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு, வருடந்தோறும், அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை தான் பருவமழை காலம்.
அப்போதுதான் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால் தற்போது கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பயங்கர மழை இடைவிடாமல் கொட்டித் தீர்க்கிறது. இதனால் 8 மாகாணங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது. தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் சிலாங்கூர் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
மாகாணம் முழுக்க வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் முழுவதும், மழைநீர் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கிப் போனது. எனவே, சுமார், 70,000 மக்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
தொடர் கனமழையால் வெள்ளம் வடிய வழியின்றி, மேலும், நிலை மோசமடைகிறது. இதனால், தற்போது வரை 14 நபர்கள், வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போனதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.