சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் , ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொருத்தவரை நீலகிரி , கோவை , திண்டுக்கல் , தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓர் இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்தார்.
மேலும் காஞ்சிபுரம் , திருவள்ளூர் , வேலூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் , கனமழை பொறுத்தவரை சென்னை , விழுப்புரம் , கடலூர் , புதுவை ஆகிய மாவட்டத்திலும் , டெல்டா மாவட்டங்கள் அரியலூர் , பெரம்பலூர் , சேலம் , நாமக்கல் , கிருஷ்ணகிரி , தர்மபுரி , ராமநாதபுரம் , புதுக்கோட்டை , மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். அதே மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு இன்றும் , நாளையும் 22 , 23 ஆகிய நாட்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளன.சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.