வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது.
இந்த மழையின் காரணமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கனமழையின் காரணமாக புதுச்சேரியிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தற்போது காரைக்காலில் சாலையோரமாக பேனர்கள், விளம்பர பலகைகள், போர்டுகள் மற்றும் விளம்பர கம்பங்கள் போன்றவைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விளம்பர பாதகைகளால் ஏதேனும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.