இன்று இந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், “நேற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.