தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியசை ஒட்டி வெப்பம் பதிவாகும் என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
இன்று மத்திய மேற்கு வங்க கடல், வட தமிழக, ஆந்திர கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 50 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் ஜூன் 21 முதல் 25 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.