கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கொட்டும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், மாலையில் இந்த தண்ணீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக உயர்ந்து விட்டது.
இதே போன்று ஒகேனக்கல்லிலும் காலையில் வினாடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் வினாடிக்கு 22,000 கன அடி வீதமாக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில் மேட்டூர் அணைக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அங்கு வினாடிக்கு 17,937 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 9000 கன அடி வீதமும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 89.5 அடியாக உள்ளது. இதனால் வெள்ள அபாயம் என்பது சுலபமாக ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.