சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்தது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்துதப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
கிராம புறங்களில் இந்த நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகர புறங்களில் இந்த நோய் தொற்று தொடர் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினார்.
இந்த பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் ஏதும் செயல்படவில்லை. மக்கள் யாரும் வெளியே வர அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நேற்று இரவோடு முழு ஊரடங்கு நிறைவு பெற்றது. இதனால் இன்று மட்டும் இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மே 1ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் வழக்கம் போல செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இன்று பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.