தனது பண்ணை நிலத்திற்குச் சென்று வர ஹெலிகாப்டர் வேண்டி பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாசந்தி பாய் லோகர் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு ஹிந்தியில் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தனக்கு சொந்தமாக உள்ள சிறிது பண்ணை நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரமானந்தர் என்ற நபரும் அவரது இரண்டு மகன்களும் அந்த பெண்ணின் நிலத்திற்கு செல்லும் இரு சாலை வழிகளையும் அடைத்து விட்டனர். இதனால் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தனக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது சாலை வழியாக தன்னுடைய நிலத்திற்கு போக முடியாததால் ஹெலிகாப்டர் இருந்தால் தான் தனது நிலத்திற்கு செல்ல முடியும் என்றும், அதனை வாங்க தன்னிடம் போதிய அளவு பணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஹெலிகாப்டரை வாங்குவதற்காக கடன் வழங்குவதற்கும், அதற்கான உரிமம் மற்றும் விவசாயம் மேற்கொள்வதற்கு தேவைப்படும் கருவிகளையும் வாங்கி கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒரு பெண் ஜனாதிபதிக்கு ஹெலிகாப்டர் வேண்டி எழுதிய கடிதம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இது குறித்து அறிந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணிற்கு கண்டிப்பாக உதவி செய்வேன் என்று கூறியிருக்கிறார்.