இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் திரை பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வருடம் தோறும் தீபாவளி கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படும். அதேபோன்று நடப்பாண்டிலும் நேற்று தொண்டு நிறுவனத்தின் சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் நடிகைகள் வாணி போஜன், தன்யா ரவிச்சந்திரன், கிரித்திகா உதயநிதி, நடிகர்கள் அஸ்வின் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஆதரவற்ற குழந்தை களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். அதன்பிறகு நடிகை வாணி போஜன் குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, 18 ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளியை கொண்டாடியுள்ளோம்.
இந்த நிகழ்ச்சியில் நான் 3-வது முறையாக கலந்து கொண்டுள்ளேன் என்றார். இதனையடுத்து நடிகர் கருணாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உதவும் உள்ளங்கள் 25 வருடங்களாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். ஒரு இடத்திற்கு ஏராளமான குழந்தைகளை அழைத்து வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.