துளசி, கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம்.
துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும்.
இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். ரத்தம் சுத்தமாகும். தாய்ப்பால் பெருகும்.
துளசி இலைச்சாறு 10 மில்லி லிட்டர், தேன் 50 மில்லி லிட்டர், வெந்நீர் 50 மில்லி லிட்டர் கலந்து காலை, மாலை என இரு வேளை 40 நாட்கள் சாப்பிட இருதய நோய் குணமாகும்.
துளசி இலைச்சாற்றில் மாசிக்காயை நன்கு இழைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் மற்றும் வலி குணமாகும்.
துளசி இலைச்சாறு, வில்வ இலைச்சாறு வகைக்கு 500 மில்லி லிட்டர் எடுத்து அத்துடன் 20 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்துவர சைனஸ் தொல்லை தீரும்.
துளசிச்சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, விளக்கெண்ணெய் இவற்றை சம அளவு எடுத்து காய்ச்சி 15 முதல் 30 மில்லி லிட்டர் வீதம் உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
துளசி விதையை பாலில் இட்டுக் காய்ச்சி குடித்து வர வெள்ளை, வெட்டை, மேக நோய்கள் குணமாவதுடன், மகப்பேறு ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உட்கொண்டு வர பிரசவம் எளிதாகும்.