உலகில் வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியல் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸினால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் அதிகம் வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலாக வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் எத்தனை வெளிநாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். குறிப்பாக மூன்று ஆண்டாக ஜப்பான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
இதே போன்று ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸில் தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான் மற்றும் ஏமன் போன்ற நாடுகள் வலிமை குறைந்த நாடுகளின் பட்டியலிலே இருக்கின்றனர். அதிலும் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு 84வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால் தற்பொழுது 6 இடங்கள் பின்தங்கி 90வது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் 90-வது இடத்தை தஜிகிஸ்தான் மற்றும் புர்கினா பாசோ போன்ற நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.