தனது காதலி கவுரவக்கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார்..
புதுக்கோட்டையை அடுத்துள்ள திருவரங்குளம் அருகேயுள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் என்பவரின் மகள் சாவித்ரி.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் காலேஜில் பி.எஸ்சி., விலங்கியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவியும் தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக வேலைபார்க்கும் 20 வயதுடைய விவேக் என்பவரும் கடந்த சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மாணவி சாவித்ரியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் சாவித்ரிக்கு வீட்டில் திருமண செய்து வைக்க தடபுடலாக ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த சாவித்ரி காதலன் விவேக்கிடம் இதுபற்றி கூறியுள்ளார்.. அதன்பின் இருவரும் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்ள காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.
இவர்களது கார் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சென்றபோது, அங்கு சோதனைச்சாவடியில் காரை காவல்துறையினர் மறித்து சோதனை செய்தனர்.. அப்போது இருவரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்கிறோம் என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஜோடி இருவரையும் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து போலீசார் வரவழைத்தனர்.
இதில் விவேக்கிற்கு 21 வயது நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் இருந்ததால், சாவித்ரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தான் கடந்த 11ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்ரி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடலை உடனடியாக அவரது பெற்றோர் எரித்து விட்டதாகவும் விவேக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து விவேக் மற்றும் மாதர் சங்கம், சி.ஐ.டி.யூ.வினர், இந்திய மாணவர் சங்கம் (sfi), தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஒரு புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், சாவித்ரி தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.. அவரை கவுரவக்கொலை செய்து விட்டனர்.. உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.. மனுவை பெற்ற அவர், ஆலங்குடி காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் சாவித்ரி தரப்பினர் கூறியதாவது, அவர் தற்கொலை செய்து விட்டதாகவும், அதனால் உடனடியாக உடலை எரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் சடலத்தை எரித்து விட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, ஆலங்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவ இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலி திடீரென உயிரிழந்ததும், அவர் கவுரவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வெளியான தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.