விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திருக்குமரனுக்கும், மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகள் மகாலட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதியருக்கு, தீபக் என்ற 1 வயது ஆண் குழந்தையும் இருந்தது.
திருக்குமரன் சிங்கப்பூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி கேமரா ஆபரேட்டராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் 1 வயது குழந்தை தீபக் உடன் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டி நாகப்பன் செட்டியார் தெருவில் தன்னுடைய மாமனார் முருகேசன் வீட்டில் வசித்துவந்துள்ளார்.
இந்தநிலையில் தான் இன்று மாமனார் முருகேசன் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார்.. அப்போது வீட்டில் மருமகள் மகாலட்சுமியை காணவில்லை.. வீட்டில் அங்கும் இங்கும் தேடியுள்ளார்.. தொடர்ந்து மாடியில் சென்று பார்த்தபோது தான் மேலே உள்ள அறையில் மகாலட்சுமி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு முருகேசன் அலற, சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அருப்புக்கோட்டை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குழந்தை தீபக்கை காணாமல் தேடியபோது, மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தை தீபக் சடலமாக மீட்கப்பட்டார்.. இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.