குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது.
குலதெய்வம் என்பது தாய், தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் காணமுடியாத அருட்சக்தியாக பார்க்கப்படுகிறது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து கடந்து செல்வார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிருத்தியே அனைத்தையும் செய்துமுடிப்பார்கள்.
அதே போல் சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கும். இதனால் குடும்பத்தில் சஞ்சலங்கள், கவலைகள், தீரா நோய்கள், கடன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து போவார்கள்.
இப்படி, குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபட, அகத்திய மாமுனிவர் வழிபாடு செய்த வனதுர்க்கையை பின்பற்றலாம். கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனதுர்க்கை கோயில் நிலைகொண்டுள்ளது.
சூரியனின் கதிர்கள் துர்க்கையம்மனின் மீது படுவதால், இந்த துர்க்கைக்கு ‘ஆகாச துர்க்கை’ என்றும் பெயர் உள்ளது. இந்த கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வழிபாடு செய்வது சிறப்பாக அமையும்.
எழுமிச்சை விளக்கேற்றி வழிபட குலதெய்வத்தின் சக்தி நம்மை சூழும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் பெற்று சஞ்சலங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.