கேரளாவில் 4 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று எர்ணாகுளம், இடுக்கி உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்றும், எர்ணாகுளம் மற்றும் கிழக்கு உட்பட 6 மாவட்டங்களுக்கு நாளையும், அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங் களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் மலையோர பகுதிகள், கடற்கரை உட்பட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.